search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விருதுநகர் தொகுதி"

    • கூட்டணி தர்மத்தை மதித்து மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றேன்.
    • கேப்டன் இல்லை என்று யாரும் வருத்தப்பட வேண்டாம். அவரது ஆசியால்தான் நான் இயங்கி வருகிறேன்.

    சிவகாசி:

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் விஜயகாந்த் மகனை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    உங்கள் அண்ணன் மகனுக்கு நீங்கள் பெருவாரியான வாக்குகளை அளிக்க வேண்டும். 32 வயதில் படித்து முடித்துவிட்டு எத்தனையோ கனவுகள் இருந்தாலும் அதை தூக்கி எறிந்து விட்டு தந்தையின் வழியில் மக்கள் சேவை செய்ய இந்த தொகுதியில் அவர் போட்டியிடுகின்றார். உங்கள் எல்லாருக்கும் தெரியும் தம்பிக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகவில்லை. இந்த விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற பின்னர் இந்த தொகுதி மக்களின் தலைமையில் தான் அவருக்கு திருமணம் நடக்கும்.

    கூட்டணி தர்மத்தை மதித்து மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றேன். எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமராகும் வாய்ப்பு இருப்பதாகவும் அனைத்து கணிப்புகளும் தெரிவிக்கின்றன. இந்த தொகுதியில் தே. மு.தி.க. வெற்றி பெற்றவுடன் அவர் பல நல்ல திட்டங்களை இந்த தொகுதியில் அறிவித்து செயல்படுத்த உள்ளார். அதில் சிலவற்றை என்னிடம் கூறினார். அதை நான் உங்களிடம் கூறுகின்றேன்.

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் கேப்டன் பிறந்தநாள் அன்று 60 பெண்களை தேர்வு செய்து பெண்கள் நாட்டின் கண்கள் திட்டத்தின் மூலம் எங்களது சொந்த நிதியிலிருந்து அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க உள்ளார். ஆண்டுதோறும் 6 லட்சம் வீதம் 5 வருடத்தில் ரூ.30 லட்சம் வரை பெண்களுக்கு நிதி உதவி வழங்க உள்ளார்.

    தொகுதி முழுவதிலும் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம் தொடங்கப்படும். இலவச தையல் பள்ளிகள், இலவச நீட் கோச்சிங் சென்டர், படித்த படிக்காத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, தையல் பயிற்சி பெற்ற பெண்களுக்கு இலவச தையல் மிஷின்கள் வாங்கி கொடுத்து அவர்கள் வாழ்வாதாரம் உயர நடவடிக்கை, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாளாக உயர்த்தவும் கூலித் தொகையை ரூ.500 ஆக அதிகரிக்கவும் பாராளுமன் றத்தில் கோரிக்கை வைப்பார்.

    நமது வேட்பாளர் வயதில் சின்னவர் என்று நினைக்காதீர்கள். அவர் நல்ல அறிவாளி, உலகம் முழுவதும் சுற்றி வந்துள்ளார். பல்வேறு மொழிகளை பேசும் திறமை கொண்டவர். பாராளுமன்றத்தில் உங்கள் பிரச்சனைகளை எழுப்பி அதற்கு தீர்வு காணும் வல்லமை அவரிடம் உள்ளது. குணத்திலும், பழகுவதிலும் கேப்டனின் மறு உருவம். 34 வருடம் கேப்டனுக்கு மனைவியாக வாழ்ந்தும், அவருக்கு தாயாக இருந்தும் சேவை செய்திருக்கிறேன். கேப்டன் இல்லை என்று யாரும் வருத்தப்பட வேண்டாம். அவரது ஆசியால்தான் நான் இயங்கி வருகிறேன்.

    இவர் அவர் பேசினார்.

    • பெண்களுக்கு தகப்பனாராகவும், சகோதரராகவும் திட்டதை நமது முதல்வர் கொண்டு வந்துள்ளார்.
    • ராகுல் காந்தியும் இந்தியாவில் மகாலட்சுமி திட்டத்தை அறிவித்துள்ளார்.

    சிவகாசி:

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து சிவகாசி அருகே உள்ள தாயில் பட்டியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், மக்களிடம் ஓட்டு கேட்க தி.மு.க.வுக்கு அதிக உரிமை உள்ளது. வானம் பார்த்த பூமியான விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழில் பிரதானமாக உள்ளது. மத்தியில் ஆட்சி அமைக்கும், அதில் மாணிக்கம் தாகூர் அமைச்சராக பொறுப்பேற்பார். அப்போது பட்டாசு பிரச்சனைக்கு நிரந்தரமாக தீர்வு காணப்படும்.

    காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 100 நாள் வேலையை 150 நாட்களாகவும், சம்பளம் 400 ஆகவும் உயர்த்தி தரப்படும். தேர்தல் முடிந்த பின்னர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் உரிமை திட்டம் இந்தியாவில் தமிழ் நாட்டில் மட்டும் தான் செயல்படுகிறது. பெண்களுக்கு தகப்பனாராகவும், சகோதரராகவும் திட்டதை நமது முதல்வர் கொண்டு வந்துள்ளார்.

    அதனைப் போன்று ராகுல் காந்தியும் இந்தியாவில் மகாலட்சுமி திட்டத்தை அறிவித்துள்ளார். அதில் பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்படும். அதற்காக பத்திரம் ஒன்று எழுதி உறுதி கொடுத்துள்ளார் என்றார். பிரசாரத்தில் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் கைச்சின்னத்தில் வாக்களித்து சமூக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    • பிரதமர் மோடி பதவிக்கு வந்த போது கேஸ் சிலிண்டர் விலை ரூ. 450 ஆக இருந்தது.
    • மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலர்ந்தால் கேஸ் விலையை ரூ.500 ஆக குறைக்கப்படும்.

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றம், ஹார்வி பட்டி, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பொதுமக்களிடம் கை சின்னத்திற்கு ஆதரவு கேட்டு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    பிரதமர் மோடி பதவிக்கு வந்த போது கேஸ் சிலிண்டர் விலை ரூ. 450 ஆக இருந்தது. தற்போது அதன் விலை ரூ.ஆயிரத்திற்கு மேல் சென்று விட்டது. தற்போது தேர்தலுக்காக 100 ரூபாய் குறைத்தவர்கள், மீண்டும் வெற்றி பெற்றால் சமையல் கேஸ் விலையை ரூ.2000 ஆக உயர்த்தி விடுவார்கள். மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலர்ந்தால் கேஸ் விலையை ரூ.500 ஆக குறைக்கப்படும். இது தவிர மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு, கல்வி கடன் ரத்து செய்யப்படும். மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஏழைப் பெண்களுக்கு 1 லட்சம் ரூபாய் ஆண்டுக்கு வழங்கப்பட உள்ளது. இதேபோல ஏழைகளுக்கு ரூ.25 லட்சத்தில் மருத்துவ காப்பீடு ஊரக வேலை உறுதித்திட்டம் 100 நாட்களில் இருந்து 150 நாட்களாக உயர்த்தப்படும். மேலும் அதற்கான ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தி வழங்கப்படும். இதே போல இளைஞர்களுக்கு மத்திய அரசில் 30 லட்சம் காலி பணியிடங்கள் உடனடியாக நிறைவேற்றப்படும். எனவே வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி மீண்டும் பிரதமராகும் வகையில் அனைவரும் கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன், துணைச் செயலாளர் பாலாஜி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டியன், பகுதி செயலாளர் உசிலை சிவா, மண்டல தலைவர் சுவிதா, மண்டல தலைவர் கவிதா விமல், அணி அமைப்பாளர்கள் விமல், ஆலங்குளம் செல்வம், கீழக்குயில்குடி வி.ஆர். செல்வந்திரன், காங்கிரஸ் கட்சியின் தொகுதி பொறுப்பாளர் எம்.பி.எஸ். பழனிக்குமார், தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர்கள் தென்பழஞ்சி சுரேஷ், கரு வேலம்பட்டி வெற்றி, சாமி வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேர்தலில் நீங்கள் அளிக்கும் வாக்கு என்பது இந்தியாவினுடைய பிரதமரை தீர்மானிக்கின்ற வாக்கு.
    • கப்பலூர் டோல்கேட்டை பலமுறை அகற்றக்கோரி போராட்டம் நடத்தினோம்.

    விருதுநகர்:

    இந்தியா கூட்டணி சார்பில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் திருமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட புளியங்குளம், செக்கானூரணி, கிண்ணிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை தீவிர வாக்கு சேரித்தார். செக்காலூ ரணியில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலையணிவித்து அவர் பேசியதாவது:-

    இந்த தேர்தலில் நீங்கள் அளிக்கும் வாக்கு என்பது இந்தியாவினுடைய பிரதமரை தீர்மானிக்கின்ற வாக்கு. இந்தியாவின் பிரதமராக யார் வரவேண்டும். யார் வரக்கூடாது தீரமானிக்கும் தோதல். 100 நாள் வேலை திட்டத்தை காப்பாற்றும் பிரதமர் வேண்டுமா? அல்லது 100 நாள் வேலையை முடித்து வைக்கிற பிரதமர் வேண்டுமா? என்பதை பொதுமக்கள் யோசித்து பார்க்க வேண்டும். சிலிண்டர் விலை 2000 ரூபாய் உயர்த்தும் பிரதமர் வேண்டுமா? இல்லை ஆயிரம் ரூபாயிலிருந்து 500 ரூபாயாக குறைக்கும் பிரமர் வேண்டுமா? என்று பார்க்க வேண்டும். பிரதமர் மோடி 100 நாள் வேலையை கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கொடுத்து கொன்று வருகிறார். தேர்தல் மூலம் மோடிக்கு நீங்கள் வழியனுப்பு விழா நடத்த வேண்டும். அதற்காக வரும் 19ந் தேதி நீங்கள் கை சின்னத்துக்கு ஓட்டு போடணும். ராகுல் காந்தி பிரதமர் ஆனால் மகளிருக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கும் மகாலட்சுமி திட்டத்தை செயல்படுத்துவார். இந்த திட்டம் மூலம் ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் ரூ. 1 லட்ச ரூபாய் ஆண்டுக்கு கிடைக்கும். 10 கோடி பெண்களுக்கு இந்த திட்டம் கொடுக்க போகிறார். இந்த திட்டத்தில் பெண்கள் திரளாக சேர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து கப்பலூர் அருகே உச்சப்பட்டியில் மாணிக்கம் தாகூர் பிரசாரம் மேற்கொண்டு பேசுகையில், கப்பலூர் டோல்கேட்டை பலமுறை அகற்றக்கோரி போராட்டம் நடத்தினோம்.

    டோல்கேட்டால் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் கப்பலூர் டோல்கேட் மூடப்படும் அல்லது வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • காங்கிரஸ் கட்சி டெல்லியில் குடும்ப ஆட்சி நடத்துகிறது, தி.மு.க. தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடத்துகிறது.
    • இரண்டு கட்சிகளும் சேர்ந்து இந்தியா கூட்டணியை ஆரம்பித்துள்ளது.

    ராஜபாளைம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தென்காசி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான்பாண்டியனை ஆதரித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    முன்னதாக அவர் ராஜபாளையத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வந்திறங்கினார். பின்னர் தென்காசி சாலையில் உள்ள சொக்கர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து தென்காசி சாலையில் காந்தி கலை மன்றம், பி.எஸ்.கே.பூங்கா, காந்தி சிலை ரவுண்டானா வரை ரோடு-ஷோ நடத்தினார். தொடர்ந்து பழைய பஸ் நிலையம் அருகே பிரசார வாகனத்தில் வாக்கு சேகரித்தார்.

    தொடர்ந்து ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தின் முன்பு வந்து பொது மக்களிடையே பேசியதாவது:-

    தமிழகத்தில் தென்காசி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் போட்டியிடும் ஜான்பாண்டியனை ஆதரித்து பிரசாரம் செய்ய மோடி உத்தரவின் பேரில் இங்கு வந்துள்ளேன். பா.ஜ.க. கூட்டணியில் போட்டியிடும் ஜான்பாண்டியன் இந்த பகுதியில் முக்கிய நபராக இருந்து வருகிறார். இவருக்கு நீங்கள் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.


    இந்த தொகுதியில் பிரச்சனைகள் அனைத்து சரி செய்யப்படும். காங்கிரஸ் கட்சிக்கும், தி.மு.க. கட்சிக்கும் ஒரே வித்தியாசம் தான். அது, காங்கிரஸ் கட்சி டெல்லியில் குடும்ப ஆட்சி நடத்துகிறது, தி.மு.க. தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடத்துகிறது. இந்த இரண்டு கட்சிகளும் சேர்ந்து இந்தியா கூட்டணியை ஆரம்பித்துள்ளது.

    இதற்கு முன்னால் உலக நாடுகள் இந்திய நாட்டின் பேச்சை காது கொடுத்து கேட்டதில்லை. இப்போது மோடி ஆட்சியில் உலக நாடுகள் இந்தியா சொல்வதை கேட்கின்றன. காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா பொருளாதாரத்தில் 11-வது இடத்தில் இருந்தது, தற்போது மோடி ஆட்சியில் 5-ம் இடத்திற்கு வந்துள்ளது.

    மேலும் நீங்கள் தொடர்ந்து வாக்களித்து வெற்றி பெற செய்தால் இந்தியாவின் பொருளாதார நிலையை டாப் 3 இடத்திற்கு முன்னேற்றி கொண்டு வருவோம். மோடியின் ஆட்சியில் எல்லையில் தாக்கி வந்த எதிரி நாடுகளை ஒடுக்கி இந்தியா பலவீனமான நாடு அல்ல, பலமான நாடு என்று உலக நாடுகளுக்கு காட்டி வருகிறார்.

    பிரதமர் நரேந்திர மோடியின் பார்வையில் 2047-ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக மாறும். பிரதமராக மோடி 3-வது முறையாக பதவி ஏற்பார். அப்போது உலகின் சூப்பர் பவராக இந்தியா மாறும். அதனால் மோடியின் ஆட்சி மீண்டும் மத்தியில் அமைய வேண்டும். எங்கள் கூட்டணி வேட்பாளர் ஜான்பாண்டியனுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • எடப்பாடி பழனிசாமிக்கு ஜென்ம சனி பிடித்துள்ளது.
    • பிரதமர் மோடி ஒரு அரசியல் கட்சித் தலைவரை கட்டிப்பிடித்தால் அந்தக் கட்சியே இரண்டாகி விடும்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல்லில் விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவரும், பட்டிமன்ற பேச்சாளருமான திண்டுக்கல் ஐ. லியோனி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    டெல்லியிலிருந்து ஒரு தாடிக்காரர் தமிழ்நாட்டிற்கு 5 தடவை வந்து, ஐந்து காசுக்கு பிரயோஜனம் இல்லாத லேகியம் விற்றதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை ராசி இல்லாதவர், அவருக்கு கட்டம் சரியில்லை என்கிறார். எடப்பாடி பழனிசாமி கடப்பாறையை முழுங்கிவிட்டு சுக்கு கசாயம் குடித்தால் பிரச்சனை தீராது.

    எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்ற பிறகு அ.தி.மு.க. தொடர்ந்து தேர்தல்களில் தோல்வியை தான் சந்தித்து வருகிறது. அ.தி.மு.க.வினர் தோல்வியால் சோகப்பாடல் பாடிக் கொண்டு இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி போர்டு இல்லாத பஸ் டிரைவர். எந்த ஊருக்கு எங்கு போகிறோம் என்று தெரியாமலே, அதனை ஓட்டி சென்று கொண்டிருக்கிறார்.


    மூன்று முறை தமிழக முதலமைச்சராக இருந்த ஓ.பி.எஸ். இன்று ராமநாதபுரத்தில் பலாப்பழம் விற்றுக் கொண்டிருக்கிறார். இ.பி.எஸ்.சும், ஓ.பி.எஸ்.சும் சேர்ந்து ஒரு கட்சியை நாசப்படுத்தி விட்டனர். பிரதமர் மோடி ஒரு அரசியல் கட்சித் தலைவரை கட்டிப்பிடித்தால் அந்தக் கட்சியே இரண்டாகி விடும்.

    தற்போது பா.ம.க. கட்சியை சேர்ந்த ராமதாசை கட்டிப்பிடித்திருக்கிறார். அரசியலை விட்டுவிட்டு எடப்பாடி பழனிசாமி இலந்தைப் பழம் விற்க போகலாம். எடப்பாடி பழனிசாமிக்கு ஜென்ம சனி பிடித்துள்ளது. அது சாகும்வரை அவரை விடாது.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு மக்கள் ஆதரவு தராவிட்டால் எடப்பாடி பழனிசாமி அரசியலை விட்டு போய்விடுவாரா? பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா நல்ல நடிகை. முக்கா துட்டுக்கு பிரயோஜனம் இல்லாத அவரை பார்க்க வேண்டும் என்று சென்னைக்கு போனால், ஆறு காவலாளிகளை கடந்து தான் அவரையே பார்க்க முடியும். மறைந்த விஜய காந்திற்கு அரசு மரியாதை கொடுத்து நல்லடக்கம் செய்த தி.மு.க.வுக்கு தான் மனசாட்சி உள்ள தே.மு.தி.க.வினர் ஆதரவு கொடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் பிரசாரத்தில் அவர் பேசுகையில், பெண்களுக்காக தி.மு.க. அரசு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது குறிப்பாக மகாலட்சுமி என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தி பெண்கள் வாழ்வில் வளம் சேர்க்க உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி நேரத்துக்கு நேரம்நிறம் மாறும் பச்சோந்தி ஆவார். அவர் எல்லோருக்கும் துரோகம் செய்தவர். மோடி தேர்தலுக்கு தேர்தல் தமிழ்நாட்டுக்கு வந்து கூளை கும்பிடு போடுவார் அவரை நம்பா தீர்கள் என்றார்.

    • முக்கிய தொழிலான பட்டாசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்கும் வகையில் எனது பணி இருக்கும்.
    • பா.ஜ.க கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி இருக்கிறார்.

    சிவகாசி:

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் நடிகை ராதிகா சரத்குமார் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருத்தங்கல் பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த தொகுதியில் சிறப்பான பல திட்டங்களை என்னால் கொண்டு வர முடியும். விருதுநகருக்கும் -டெல்லிக்கும் நான் பாலமாக இருப்பேன். இந்தியாவில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் கூட அடுத்த பிரதமர் மோடிஜி தான் என உறுதியாக கூறுகின்றனர். 400-க்கும் மேற்பட்ட எம்.பி. தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றும். இந்த தொகுதியில் வெற்றி பெற்று நான் எம்.பி.யாக பாராளுமன்றம் செல்ல எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.

    இப்பகுதியின் முக்கிய தொழிலான பட்டாசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்கும் வகையில் எனது பணி இருக்கும். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல கோடி சிகரெட் லைட்டர்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டது. இதனால் சிவகாசியில் தீப்பெட்டி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை சந்தித்து பிரச்சனையை தீர்க்க கோரிக்கை வைத்தனர். அவர் சிவகாசி தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் பிரச்சனைகளை நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் எடுத்துக் கூறி இறக்குமதி செய்யப்படும் சீன லைட்டர்களுக்கு கூடுதல் வரிகளை விதிக்க செய்தார். அதனால் தற்போது லைட்டர் விற்பனை முடக்கியது.

    இப்போது சிவகாசி தீப்பெட்டிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. எனக்கு அரசியல் ஆர்வம் இருந்தாலும் இவ்வளவு நாள் நான் எந்த தேர்தலிலும் போட்டியிட்டது இல்லை. முதல் முறையாக விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறேன். என்னை வெற்றி பெறச்செய்யுங்கள். பா.ஜ.க கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி இருக்கிறார். தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியில் யாரை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பார்கள். யாருக்காக இவர்கள் இரண்டு பேரும் ஓட்டு கேட்கின்றனர்? எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று டெல்லிக்கு சென்று தமிழக பிரச்சனைகளை தீர்ப்பேன் என்கிறார். அவர் யாரை சந்திப்பார்? யாரிடம் முறையிடுவார்? ஏற்கனவே தமிழ்நாட்டில் அவர் பீஸ் ஆகிவிட்டார். இனி அவர் என்ன செய்யப் போகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பெண்கள் தங்களின் பிரச்சனைகளை பேசுகிறார்கள்.
    • வெற்றி பெறுவோம் என்ற முழு நம்பிக்கை உள்ளது.

    விருதுநகர் மக்களவை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:-

    கேள்வி: முதன்முறையாக வேட்பாளராக இருக்கும் அனுபவம் எவ்வாறு இருக்கிறது?

    பதில்: எல்லா இடங்களிலும் மக்கள் தங்களின் அன்பை உணர்த்துகிறார்கள். பெண்கள் தங்களின் பிரச்சனைகளை பேசுகிறார்கள். வெற்றி பெறுவோம் என்ற முழு நம்பிக்கை உள்ளது.

    கேள்வி: நீங்கள் பாரதிய ஜனதாவில் சேர்ந்தது ஏன்?

    பதில்: ஏன் சேரக்கூடாதா? பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் உங்களுக்கு தெரியவில்லையா?

    கேள்வி: தொகுதியில் உங்களுக்கு முக்கிய போட்டியாளர் யார்?

    பதில்: விஜய பிரபாகரோ அல்லது மாணிக்கம் தாகுரோ. போட்டியாளர்களை பற்றி சிந்திக்கவில்லை. நாங்கள் எங்களின் போசனைகளை ஊக்குவிக்கவும், அதை மக்களிடையே பரப்பவும் முயற்சிக்கிறோம்.

    கேள்வி: எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டால் தொடரந்து செயல்படுவீர்களா?

    பதில்: அதையெல்லாம் முடிவு செய்ய இன்னும் நேரம் இருக்கிறது. இப்போது தேர்தல்வெற்றியே ஒரே இலக்கு என்றார்.

    • எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியை முன் மாதிரி தொகுதியாக மாற்றி காட்டுவேன் என்றார்.
    • பொதுமக்கள் ரசித்து கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

    திருமங்கலம்:

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். நேற்று தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் கப்பலூர் தொகுதியில் தனது கணவர் சரத்குமாருடன் திறந்த ஜீப்பில் சென்று பிரசாரம் செய்தார்.

    அப்போது ராதிகா பேசுகையில், உங்கள் சகோதரியாக, அக்காவாக, சித்தியாக பாராளுமன்றத்தில் போராடுவேன். இந்த கூட்டணி எது சொன்னாலும் செய்யும் கூட்டணி. ஆனால் எதிர் கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர்? என்று கூட தெரியவில்லை.

    எனவே எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியை முன் மாதிரி தொகுதியாக மாற்றி காட்டுவேன் என்றார்.

    பிரசாரத்தை நிறைவு செய்த பின்னர் அங்கிருந்த புறப்பட தயாராக இருந்த ராதிகாவிடம் திரளாக கூடியிருந்த பெண்கள் கிழக்கு சீமையிலே படத்தில் நடித்த விருமாயி கதாபாத்திரம் போல் பேசி காட்டுங்கள் என கூறினர்.

    உடனே ஜீப்பில் நின்றிருந்த ராதிகா மடியேந்தி கிழக்கு சீமையிலே திரைப்படத்தில் நடித்த விருமாயி கதாபாத்திரமாகவே மாறி தழுவும் குரலில் போல் பேசி வாக்கு சேகரித்தார். அதனை அங்கிருந்த பொதுமக்கள் ரசித்து கை தட்டி ஆரவாரம் செய்தனர். அதேபோல் அவரது கணவரும், நடிகருமான சரத்குமாரும் ரசித்து, நெகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

    • தென்காசி தொகுதி தி.மு.க.வுக்கும், விருதுநகர் தொகுதி காங்கிரசுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    இந்தியாவின் 18-வது பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ள தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கிறது. இதில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த 22-ந்தேதி திருச்சியில் தேர்தல் பிரசார பயணத்தை தொடங்கினார்.

    23-ந்தேதி தஞ்சை, நாகையிலும், 25-ந்தேதி நெல்லை, கன்னியாகுமரியிலும், நேற்று (26-ந்தேதி) தூத்துக்குடியிலும் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஒவ்வொரு தொகுதியின் வேட்பாளரையும் அறிமுகம் செய்துவைத்து பேசினார். தூத்துக்குடியில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு நேற்று இரவு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விருதுநகர் வருகை தந்தார்.

    மாவட்ட எல்லையில் அவருக்கு அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து விருதுநகரை அடுத்த ஆர்.ஆர்.நகர் பகுதியில் உள்ள ராம்கோ விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார். இன்று தென்காசி, விருதுநகர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் செய்கிறார்.


    இதில் தென்காசி தொகுதி தி.மு.க.வுக்கும், விருதுநகர் தொகுதி காங்கிரசுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு களம் காணும் வேட்பாளர்களை ஆதரித்து ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த கிருஷ்ணன்கோவிலில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி ஆதரவு திரட்டி பேச உள்ளார்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று மாலை மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசும் மேடையின் முகப்பு பகுதி பாராளுமன்ற கட்டிடம் வடிவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. மதுரை-தென்காசி சாலையில் இருபுறமும் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினரின் கொடிகள் நட்டு, தோரணங்கள் வைக்கப்பட்டுள்ளன.

    பிரசார கூட்டம் முடிந்ததும் முதலமைச்சர் அங்கிருந்து சாலை மார்க்கமாக மதுரை சென்று பின்னர் விமானத்தில் சென்னை புறப்படுகிறார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகையை முன்னிட்டு தி.மு.க. தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராஜபாளையத்தில் இருந்து மதுரை செல்லும் பேருந்துகள் ஸ்ரீவில்லிபுத்தூர் சர்ச் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சிவகாசி, விருதுநகர் வழியாக மதுரை சென்றடையும். அதே போல் மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்துகளும் திருமங்கலத்தில் இருந்து விருதுநகர், சிவகாசி வழியாக இயக்கப்படும். அத்துடன் இன்று முழுவதும் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கனரக வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×